வீட்டின் மீது மோதி தலைகீழாக நின்ற காரால் பரபரப்பு

பரமத்திவேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது மோதி தலைகீழாக நின்ற காரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-17 18:45 GMT

பரமத்திவேலூர்

தலைகீழாக நின்ற கார்

பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது33). இவர் பரமத்திவேலூர் அருகே நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூருக்கு சமையல் ஆர்டர் செய்து கொடுத்துவிட்டு மீண்டும் தனது காரில் வீட்டிற்கு செல்ல பரமத்தி வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் ஓலப்பாளையம் காலனி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது தூக்க கலக்கத்தில் இருந்த பார்த்திபன் சிறிது கண் அயர்ந்து விட்டதால் கார் திடீரென நிலைதடுமாறி சாலையின் வலது புறத்தில் கீழே கொட்டி வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ஏறி கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சிமெண்டு அட்டை வீட்டில் மோதி சினிமா படத்தில் வருவது போல் தலைகீழாக நின்றது.

உயிர் தப்பினார்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் ஓடிவந்து விபத்துக்குள்ளான காரில் இருந்த பார்த்திபனை காப்பாற்றினர். விபத்தில் அவர் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் வீடு சிறிது சேதமடைந்தது. மேலும் அந்த வீட்டிற்கு முன்பும், உள்ளேயும் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் மீது மோதி தலைகீழாக நின்ற காரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்