கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்

கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-08-16 17:17 GMT

கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக மழை குறைந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருப்பினும் அவ்வப்போது வீசும் காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுவது தொடர்கதையாகி உள்ளது.

இதற்கிடையே இன்று மதியம் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில், பூலத்தூர் பிரிவு அருகில் சாலையோரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மலைப்பாதையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.


Tags:    

மேலும் செய்திகள்