காட்சி பொருளாக இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கள்ளப்பள்ளி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து உள்ளனர்.;
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சிந்தலவாடி, கள்ளப்பள்ளி ஆகிய 2 ஊராட்சிகளுக்கும் சேர்த்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த 25 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த 2 ஊராட்சிக்கும் சேர்த்து கூட்டுக்குடிநீர் செயல்படுத்தப்படுவதால் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் கள்ளப்பள்ளி ஊராட்சிக்கென தண்ணீர் வினியோகம் செய்ய கொடிக்கால் தெரு மாரியம்மன் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கடந்த 2012-2013-ம் ஆண்டு சிறுகனிம நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
முடங்கி கிடக்கிறது
சங்கப்பிள்ளை:- கொடிக்கால் தெரு மாரியம்மன் கோவில் அருகே கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 10 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இந்த தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் இப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும். ஆனால் லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது வேதனை அளிக்கிறது.
பிரேமா:- தண்ணீர் எப்போது வரும் என காத்திருந்து குடிநீர் பிடித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வந்தால் கூடுதல் நேரம் தண்ணீர் வரும். நாங்களும் பொறுமையாக தண்ணீர் பிடிப்போம். எனவே நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்சி பொருளாக...
தட்சிணாமூர்த்தி:- கொடிக்கால் தெரு மாரியம்மன் கோவில் பகுதியில் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி யாருக்கும் பயனின்றி காட்சி பொருளாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து மேல்நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
செம்பாயி:- எங்கள் வீட்டு அருகே தொட்டி இருந்தும் பலன் இல்லை. வெகு தூரத்தில் இருந்து வரும் தண்ணீருக்காக காத்திருக்கிறோம். எங்கள் பகுதியில் உள்ள தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் தண்ணீர் எங்களுக்கு மிகுதியாக கிடைக்கும். 10 ஆண்டுகளாக முடங்கியுள்ள தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் வரிப்பணம்
தினேஷ்:- மக்கள் வரிப்பணத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி கடந்த 10 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மக்களின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் இப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.