வாடகைக்கு விட்ட வீட்டை மீட்கக்கோரி தீக்குளிக்க முயன்ற மூதாட்டி; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வாடகைக்கு விட்ட வீட்டை மீட்கக்கோரி தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-29 20:17 GMT

வாடகைக்கு விட்ட வீட்டை மீட்கக்கோரி தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தனர்.

இந்தநிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக வந்த 60 வயது மூதாட்டி ஒருவர் திடீரென்று மண்எண்ணெய் கேனை கையில் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். எதிர்பாராத விதமாக அந்த மூதாட்டியின் நடவடிக்கையால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விரைந்து வந்து மூதாட்டியை பிடித்து, அவரது கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி கைப்பற்றினர். மேலும், மூதாட்டியின் உடலில் தண்ணீரை ஊற்றினர்.

வாடகை வீட்டை மீட்க..

பின்னர் அவரிடம் விசாரித்தபோது அவர், பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி பகுதியை சேர்ந்த பத்மா என்பது தெரியவந்தது. அவருக்கு சொந்தமான வீடு பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர் நகரில் இருக்கிறது. இந்த வீட்டை பத்மாவின் அண்ணன் மூலம் வாடகைக்கு விட்டு உள்ளார். வீட்டு வாடகை மாதம்தோறும் பெற்று வந்திருக்கிறார். இந்த வீட்டை கடந்த 14-7-2021 அன்று ஒப்பந்தம் போடப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. பின்னர் வாடகைதாரருக்கும், பத்மாவுக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் வீட்டை காலி செய்யும்படி பத்மா கூறி உள்ளார். ஆனால், ஒரு ஆண்டுக்கு காலி செய்ய முடியாது என்று வாடகைதாரர் மிரட்டியதாக தெரிகிறது. இந்தநிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெறுவதற்காக சென்று வருகிறார். சிகிச்சைக்கு சென்று வர சிலேட்டர் நகர் வீடு வசதியாக இருக்கும் என்று கேட்டு, வாடகைதாரரை காலி செய்யும்படி கேட்டுக்கொண்டபோதும், அவர் காலி செய்யவில்லை. அங்குள்ள காலி இடத்தில் குடிசை அமைத்து அதில் தங்கி இருந்து சிகிச்சை பெறலாம் என்றாலும் அவர் என்னை அங்கு வரக்கூடாது என்று மிரட்டுகிறார். நான் தற்போது குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் கூறுவதால், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசில் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது வீட்டை வாடகைதாரரிடம் இருந்து மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டேன் என்றார்.

இதுதொடர்பாக அவர் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

கோட்டை விட்ட போலீசார்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு மனு கொடுக்க வருபவர்கள் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சமீப காலமாக வாரம்தோறும் யாராவது தீக்குளிக்க முயற்சி செய்து வருவதும், அவர்களை போலீசார் மீட்டு வருவதும் நடக்கிறது. எனவே திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள், கலெக்டர் அலுவலக பணியாளர்கள் வரை விடாமல் சோதனை செய்தனர். யார், பையை எடுத்துக்கொண்டு சென்றாலும் அவர்களை தடுத்து சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். தண்ணீர் பாட்டில் இருந்தாலும் அதை எடுத்து என்ன என்று சோதனை செய்தனர். இப்படி செய்தும் மூதாட்டி பத்மா மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வந்திருக்கிறார். போலீசார் கடும் சோதனை செய்தும் இந்த விஷயத்தில் கோட்டை விட்டு இருப்பதும் சோதனை குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்