பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

பணத்தை மீட்டு தரக்கோரி மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.

Update: 2023-09-25 20:28 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. குறைதீர்க்கும் கூட்ட அரங்குக்கு செல்லும் நுழைவு வாயில் அருகே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் கலெக்டர் பிரதீப்குமார் மனுக்களை வாங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது, பாட்டிலில் கொண்டு வந்த மண்ணெண்ணையை மூதாட்டி ஒருவர் திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் மற்றும் போலீசார் மூதாட்டியை தடுத்து காப்பாற்றினர். இதைத்தொடர்ந்து அவரிடம் மனுவை வாங்கி, கலெக்டர் விசாரணை நடத்தினார்.

அப்போது தீக்குளிக்க முயன்ற மூதாட்டி, திருச்சியை அடுத்த பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்த முத்தாத்தாள் (வயது 71) என்பதும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான வீட்டை ரூ.16 லட்சத்துக்கு விலை பேசி, முன்பணமாக ரூ.6½ லட்சத்தை கொடுத்ததும், பத்திரப்பதிவு செய்ய சென்றபோது, அந்த வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்று இருப்பதால் வீட்டை விற்க முடியாது என்று அதிகாரிகள் கூறியதும் தெரியவந்தது.

ஆனால், முருகானந்தம் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததும், இதுபற்றி பெட்டவாய்த்தலை போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் விரக்தியில் இருந்த மூதாட்டி, தனது மகள், மருமகன், பேத்தி ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்ததும், அப்போது தான் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, மூதாட்டியின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். பின்னர், மூதாட்டியை போலீசார் வெளியே அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்