இரும்பு கம்பிகளுக்கு இடையே தலை சிக்கியதால் அவதிப்பட்ட மூதாட்டி

இரும்பு கம்பிகளுக்கு இடையே தலை சிக்கியதால் அவதிப்பட்ட மூதாட்டி

Update: 2022-12-26 19:41 GMT

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இரும்பு கம்பிகளுக்கு இடையே தலை சிக்கியதால் அவதிப்பட்ட மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

புதிய பஸ் நிலையம்

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், வேளாங்கண்ணி, நாகை, திருவாரூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். பஸ்சிற்காக காத்திருக்கக்கூடிய பயணிகளின் வசதிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருக்கைகள் அமைக்கப்பட்டு, அந்த இருக்கைகளை சுற்றிலும் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கக்கூடிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரும்பு கம்பிகள் அருகே சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் படுத்து தூங்குவது வழக்கம். அதேபோல் நேற்றுமுன்தினம் இரவு படுத்து தூங்கினார். நேற்றுகாலையில் அந்த மூதாட்டியின் தலை மட்டும் இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கி கொண்டது. அவரது தலை எப்படி கம்பிகளுக்கு இடையே சென்றது என தெரியவில்லை. அதில் இருந்து தலையை எடுக்க முடியாமல் படுத்த நிலையிலேயே அந்த மூதாட்டி சிரமப்பட்டு கொண்டிருந்தார். இதை பார்த்த சிலர் தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பாதுகாப்பாக மீட்பு

உடனே மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா உத்தரவின்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) சரவணமுத்து, சிறப்பு அலுவலர் ரவி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் புதிய பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கியிருந்த மூதாட்டியின் தலையை வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து இரும்பு கம்பியை அறுத்து அந்த மூதாட்டியை பாதுகாப்பாக மீட்டனர். அந்த மூதாட்டி படுத்து இருந்த இடத்தின் அருகே சாப்பாடு பொட்டலங்களும், தண்ணீர் பாட்டில்களும் கிடந்தன.

இதனால் அந்த மூதாட்டி பல நாட்களாகவே இந்த பகுதியில் தான் வசித்து வருகிறார் என்பதை அறிந்த தீயணைப்பு வீரர்கள் அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது தனது பெயர் பாக்கியம் எனவும், உடையார்கோவிலை சேர்ந்தவர் எனவும் கூறினார். அதற்கு மேல் அவரால் எதுவும் பேச முடியவில்லை. அந்த மூதாட்டி கூறும் தகவல் உண்மை தானா? என்பது குறித்து விசாரணை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை காப்பகத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மருத்துவக்கல்லூரி போலீசாரிடம் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்