கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி
குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
குடியாத்தத்தை அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி பாக்கியம்மாள் (வயது 68). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. வயதான இவர்கள் பூங்குளம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் நிலத்தில் சிறிய வீட்டில் வசித்தனர்.
நேற்று மதியம் உறவினர் நிலத்திற்கு மூதாட்டி பாக்கியம்மாள் சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தவறி 80 அடி தண்ணீர் இருந்த கிணற்றில் விழுந்து உள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கிராம மக்களுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். குடியாத்தம் உதவி தீயணைப்பு அலுவலர் மகேஷ் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி பாக்கியம்மாள் உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.