இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயற்சி - கிணற்றில் இறங்கிய முதியவர் விஷவாயு தாக்கி சாவு
கிணற்றுக்குள் இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயன்ற முதியவர் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தார்.;
வளசரவாக்கம்,
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, மூன்லைட் தெருவைச் சேர்ந்தவர் தயாளன் (வயது 69). இவரது வீட்டின் பின்புறத்தில் 25 அடி ஆழமுள்ள உறை கிணறு உள்ளது. அந்த கிணற்றில் தற்போது தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்தநிலையில் அந்த கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டது. இதனால் துர்நாற்றம் வீசியது.
இதை பார்த்த தயாளன், கிணற்றில் இறந்து கிடந்த பூனையை வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்தார்.
இதற்காக வீட்டின் கேட்டில் கயிற்றின் ஒரு முனையை கட்டிவிட்டு மறுமுனையை தனது இடுப்பில் கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது கிணற்றில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில் மயங்கி விழுந்த தயாளன், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறந்து கிடந்த தயாளன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.