குன்னூர்
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டெருமைகள் சர்வசாதாரணமாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் உலா வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலையை காண முடிகிறது.
இந்த நிலையில் குன்னூர் அருகே கிளண்டேல் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 64). இவர் நேற்று அதிகாலை வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு உலா வந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரை துரத்தி வந்து முட்டி தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் காட்டெருமையை விரட்டியடித்தனர். பின்னர் ராஜசேகரை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள்.