மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி முதியவர் சாவு

மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-21 22:03 GMT

மாமல்லபுரம்,

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 60). மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அம்பத்தூரில் உள்ள தனது தம்பி அண்ணாதுரை குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாமல்லபுரத்திற்கு ஜெகதீசன் மட்டும் தனியாக சுற்றுலா வந்தார்.

மாமல்லபுரத்தில் உள்ள புராதன இடங்களை சுற்றி பார்த்துவிட்டு அவர் அங்குள்ள கடலில் குளித்தார். ராட்சத அலையில் சிக்கிய அவர் நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டு மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து போனார். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அவரது உடல் கரை ஒதுங்கியது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வாயில் நுரை தள்ளிய நிலையில் காணப்பட்ட அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக அவர் கடலில் குளிக்க செல்லும் முன்பு தனது செல்போனுடன் உள்ள சட்டையை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார்.

அவரது சட்டை பாக்கெட்டில் உள்ள செல்போன் உதவியுடன், அவர் அடையாளம் காணப்பட்ட அவரது தம்பி அண்ணாதுரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்