அரசு மதுக்கடையில் மது வாங்கிக் குடித்த இருவர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அரசு மதுக்கடையில் மது வாங்கிக் குடித்த இருவர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.;

Update: 2023-06-18 08:58 GMT

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

அரசு மதுக்கடையில் மது வாங்கிக் குடித்த இருவர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்; அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சியில் அரசு மதுக்கடையில் மது குடித்த முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் குடித்த மதுவில் நஞ்சு எதுவும் கலக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அப்படியானால், அரசு மதுக்கடையில் ஒன்றாக மது வாங்கி ஒன்றாக அருந்திய இருவர் உயிரிழந்ததற்கான காரணம் என்ன? என்ற வினாவும் அச்சமும் எழுகிறது.

அண்மைக்காலங்களில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, மதுரை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மதுக்கடைகள் மற்றும் குடிப்பகங்களில் மது வாங்கி குடித்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சாவூரில் இறந்தவர்கள் குடித்த மதுவில் சயனைடு நஞ்சு கலக்கப்பட்டிருந்தது என்று கூறப்பட்டாலும், அதைக் கலந்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிவதற்கான விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மது உயிரைக்குடிக்கும் எமன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கடந்த சில வாரங்களில் மது குடித்தவர்கள் உடனுக்குடன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மதுக்கடைகளில் கலப்பட மது விற்பனை செய்யப்பட்டதா? என்று பல்வேறு தரப்புகளில் எழுப்பப்படும் ஐயங்களுக்கு விடையளிக்க வேண்டியது அரசின் கடமை. அரசு மதுக்கடை மரணங்கள் குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.

தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். மதுவில்லாத தமிழகமே மகிழ்ச்சியான தமிழகமாக அமையும். எனவே, தமிழ்நாட்டில் அனைத்து மது வகைகளாலும் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழக்கும் கொடுமைக்கு முடிவு கட்ட, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்