அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் புலன்விசாரணை நடைபெற்று வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை வழக்கில் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை பெரம்பூர் அதிமுக கிளை செயலாளர் இளங்கோவன் கொலை தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கஞ்சா விற்கப்படுவது குறித்து இளங்கோவன், காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா, போதைப்பொருள் விற்பது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுப்பவர்கள் தாக்கப்படுகின்றனர். குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்த தீர்மானத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்து பேசியதாவது:-
அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை தொடர்பாக 2 மணி நேரத்தில் வழக்கு தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி இளங்கோவன் சஞ்சய் என்பவருடன் ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்துள்ளார். போதை பொருள் விற்பனைக்கு எதிராக கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவரவில்லை. இளங்கோவன் கொலை வழக்கு குறித்து புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது கூறினார்.