காந்திகிராம பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த போதை ஆசாமி; தப்பிக்க முயன்றவர் போலீசில் ஒப்படைப்பு

திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த போதை ஆசாமி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

Update: 2023-07-11 21:00 GMT

திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த போதை ஆசாமி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

மாணவிகள் அறை

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியூரை சேர்ந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள வாடகை வீடு, அறைகளில் தங்கி படித்து வருகின்றனர். அதேபோல் பல்கலைக்கழகம் அருகே ஒரு வீட்டின் மாடியில் உள்ள அறையில் பல்கலைக்கழக மாணவிகள் சிலர் தங்கி படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மாணவிகள் தங்களது அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். ஒரு மாணவி நள்ளிரவு திடீரென்று எழுந்தார். அப்போது அருகில் வாலிபர் ஒருவர் படுத்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி திருடன், திருடன் என அலறினார். உடனே அருகில் இருந்த மற்ற மாணவிகள் திடுக்கிட்டு எழுந்தனர்.

மாணவிகளின் சத்தம் கேட்டு எழுந்த அந்த வாலிபர் தப்பிஓடுவதற்காக மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கீேழ இறங்கினார். அப்போது வீட்டின் கீழ் அறையில் இருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை அம்பாத்துரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

போதை ஆசாமி

இதையடுத்து நேற்று காலை அந்த வாலிபரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். அதில், அவர் மதுரையை அடுத்த கருங்காலக்குடியை சேர்ந்த சதாம்உசேன் (வயது 28) என்பது தெரியவந்தது. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு வந்தார். அப்போது மதுப்பழக்கத்திற்கு ஆளான இவர், அடிக்கடி மதுபோதையில் ஒவ்வொரு இடங்களுக்கு சென்று வீடுகளுக்குள் புகுந்து மாடிக்கு சென்று தூங்குவதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் தான் காந்திகிராம பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த அறைக்குள் அவர் புகுந்ததும் தெரியவந்தது.

பின்னர் மதுரையில் இருந்து சதாம் உசேனின் உறவினர்களை போலீசார் வரவழைத்து எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்