கேரட் கொள்முதல் விலை உயர்வு

கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கேரட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2023-06-26 20:30 GMT


கோத்தகிரி


கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கேரட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


விலை உயர்வு


கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம், வனவிலங்குகளின் தொல்லை உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.


இந்தநிலையில் கேரட்டிற்கு கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தங்களது தோட்டங்களில் கேரட் பயிரிட்டனர். கேரட் பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரட் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.55 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.55 முதல் ரூ.65 வரை தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்படுகிறது.


விவசாயிகள் மகிழ்ச்சி


இந்த கொள்முதல் விலை போதுமானதாக இருப்பதால், அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து கோத்தகிரி அருகே ஈளாடா கதவுத்தொரை கிராமத்தை சேர்ந்த விவசாயி கூறும்போது, கேரட் ஒரு ஏக்கர் பயிரிட 1½ கிலோ விதைகள் தேவைப்படுகிறது. சாதாரண விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.35 ஆயிரமும், ஹைப்ரிட் விதைகள் ரூ.50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.


ஒரு ஏக்கரில் பயிரிட்டு அறுவடை செய்ய தொழிலாளர் சம்பளம், விதை, உரம், மருந்து உள்ளிட்டவைகளுக்கு என ரூ.1½ லட்சம் செலவாகிறது. ஒரு ஏக்கரில் 60 முதல் 80 முட்டைகள் கிடைக்கும். நல்ல விளைச்சல் ஆக இருப்பின் 100 மூட்டை கேரட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது தனியார் நிறுவனங்கள் விளைநிலங்களுக்கே வந்து நல்ல கொள்முதல் விலை தந்து, அவர்களே அறுவடை செய்து கேரட்டை கொண்டுச் செல்கின்றனர், என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்