கைகளை கட்டி சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரி
வேடசந்தூர் அருகே கைகளை கட்டி சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமி ஊரில் உள்ள கோவில் முன்பு மற்ற சிறுமிகளுடன் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது வேடசந்தூர் சாலைத்தெருவை சேர்ந்த ஐஸ் வியாபாரி முகமது ரபீக் (வயது 50) என்பவர், அங்கு ஐஸ் விற்று கொண்டிருந்தார்.
திடீரென அவர், சிறுமியை நைசாக அழைத்து கடத்தி செல்லும் நோக்கத்தில் அவளது கைகளை கட்டி கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து அங்குள்ள கோவிலில் அடைத்து வைத்தனர். மேலும் இதுகுறித்து கூம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கைகளை கட்டி சிறுமியை கடத்தி செல்ல முகமது ரபீக் முயற்சி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயராணி வழக்குப்பதிவு செய்து முகமது ரபீக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.