நாகை மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் பலியான பரிதாபம்

மும்பையில், கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் நாகை மாவட்டம் ஆயக்காரன்புலத்தை சேர்ந்த என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்;

Update: 2023-08-01 18:45 GMT

மும்பையில், கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் நாகை மாவட்டம் ஆயக்காரன்புலத்தை சேர்ந்த என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவில் என்ஜினீயர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் வேதரத்தினம். பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் கண்ணன்(வயது 23). தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்த இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை தானேவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியில் சேர்ந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் தானேவில் பாலம் கட்டுமான பணியில் இவர் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்தது.

பரிதாப சாவு

இந்த விபத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த 20 பேர் பரிதாபமாக பலியானார்கள். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர். அவர்களில் கண்ணனும் ஒருவர் ஆவார்.

கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் தங்களது மகன் உயிரிழந்ததை அறிந்த கண்ணனின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர்.

உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரிக்கை

விபத்தில் பலியான தங்கள் மகனின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று நேரில் வந்து கலெக்டர் ஜானி டாம் வர்கீசை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

உரிய இழப்பீடு

இது குறித்து கண்ணனின் உறவினர் சுந்தர் கூறும்போது, பாலம் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் கண்ணன் இறந்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உடலை அனுப்புவது உள்ளிட்டவைகள் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

எனவே தமிழக அரசு தலையிட்டு உடலை மீட்டுத்தருவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து உரிய இழப்பீட்டை அவரது குடும்பத்தினருக்கு பெற்றுத்தர வேண்டும் என்றார்.

திருமணம் ஆகாதவர்

விபத்தில் பலியான கண்ணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருடன் பிறந்தவர்கள் 2 பேர். மூத்தவர் மணிஷா. இவருக்கு திருமணம் ஆகி விட்டது. கடைசியாக ஒரு தம்பி உள்ளார். அவரது பெயர் அரவிந்த். திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருகிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு பணிக்காக சென்றார். வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து அவர் சொந்த ஊருக்கு திரும்பி வரவில்லை. அந்த நிறுவனம் மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்த நிலையில் இந்த விபத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்