வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயர்
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கம்பியால் தாக்கி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 47 வயது பெண் ஒருவர் சம்பவத்தன்று தனது வீட்டில் கட்டில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது கணவர் இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு பின்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பெண்ணின் உறவினரான மூவாற்றுமுகத்தை சேர்ந்த எட்வின் (28) என்ற டிப்ளமோ என்ஜினீயர் தான், வீட்டில் தனியாக இருந்த அவரை கம்பியால் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் எட்வினை கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
அதனைத்தொடர்ந்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது உறவினரான 47 வயதுடைய பெண் மீது எனக்கு ஆசை உண்டு. அவரை அடைய வேண்டும் என திட்டமிட்டேன். 3 மாதங்களுக்கு முன் அந்த பெண்ணின் வீட்டின் அருகே சென்று ஜன்னலை திறந்து பார்த்தேன். அங்கு அந்த பெண் படுத்திருப்பதை பார்த்து வெளியே நின்றபடி ரசித்து கொண்டிருந்தேன். அப்போது நாய் குரைத்ததால் அந்த பெண் கண்விழித்து வெளியே வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த என்னை பார்த்து சத்தம் போட்டார். உடனே நான் அங்கிருந்து ஓடிவிட்டேன்.
பழிவாங்க முடிவு
மறுநாள் எனது அம்மாவிடமும், உறவினர்களிடமும் இதைப்பற்றி அவர் கூறினார். இது எனக்கு பெரும் அவமானமாகிவிட்டது. இதற்கு பழிவாங்க காத்திருந்தேன்.
இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி அந்த பெண் வீட்டில் தனியாக படுத்திருந்தார். அவளை அடைய வேண்டும் என்ற ஆசையிலும், என்னை அவமானப்படுத்தியதால் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சுற்றி திரிந்த நான் இதுதான் சந்தர்ப்பம் என்று கருதினேன். பின்னர் ஒரு இரும்புக்கம்பியை எடுத்துக்கொண்டு பெண்ணின் வீட்டுக்கு சென்றேன்.
இரும்பு கம்பியால் அடித்தேன்
வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது அவர் கட்டிலில் படுத்து இருந்தார். அவரிடம் 'என்னை அவமானப்படுத்திய நீ உயிரோடு இருக்கக்கூடாது. செத்து தொலைந்து போ' என்று ஆவேசமாக கூறிக்கொண்டே கம்பியால் தலையில் அடித்தேன். இதில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. பின்னர் கழுத்தை நெரித்தேன். இதனால் அவர் அசைவின்றி கிடந்தார். தொடர்ந்து காமம் தலைக்கேறிய நிலையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
நினைவு திரும்பாத நிலையில் சிகிச்சை
இதற்கிடையே நேற்று அந்த பெண் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நினைவு திரும்பாத நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணுக்கு கணவரும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.