பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியர் கைது
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சாய்பாபாகாலனி,
கோவை-மேட்டுப்பாளையம் ரோடு சேர்மன் ராஜ் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி (வயது 38). சம்பவத்தன்று இவர் மேட்டுப்பாளையம் ரோடு பஸ்நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் லட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றார். உடனே உஷாரான லட்சுமி அந்த வாலிபரின் சட்டையை பிடித்தார். இதனால் நிலைதடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் பேரூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராம்குமார் (26) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் 7 திருட்டு வழக்குகளும், கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கும் உள்ளது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.