ஆள் இறங்கு குழியில் தவறி விழுந்த ஊழியர்

பொள்ளாச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஆள் இறங்கு குழியில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-17 19:30 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஆள் இறங்கு குழியில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதாள சாக்கடை

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் ரூ.170 கோடியே 22 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 7,400 ஆள்இறங்கு குழிகளும், 18 கழிவுநீரேற்று நிலையங்களும், 3 கழிவு நீர்உந்து நிலையங்களும், 17.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீர்உந்து குழாய்களும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாட்டு சந்தை வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் கட்டப்பட்டு உள்ளது.

தவறி விழுந்தார்

இந்த திட்டம் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து, அதற்கான பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்டநிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேலும் நகரில் ஆங்காங்கே ஏற்படும் அடைப்புகளை நவீன எந்திரம் மூலம் தூர்வாரி வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் ஆள்இறங்கு குழியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது. இதை சரிசெய்ய வந்த ஊழியர் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மூடியை திறந்து பணிகளை மேற்கொள்ள முயன்றார். அங்கு கழிவுநீர் நிரம்பி இருந்ததால், அவருக்கு குழி இருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் கால் தவறி குழிக்குள் அவர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரே சுதாரித்துக் கொண்டு எழுந்தார்.

ஆய்வு செய்ய வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பாதாள சாக்கடை திட்டத்தில் ஆள்இறங்கு குழிகளில் வீடுகளில் உள்ள கழிப்பிடத்தில் இருந்து இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆள்இறங்கு குழிகளில் ஏற்படும் அடைப்பை சரிசெய்யும் ஊழியர்கள் உரிய முகக்கவசம், கையுறை, காலுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிவதில்லை. இதனால் விஷவாயு தாக்கி உயிரிழப்புகள் கூட ஏற்பட்டு உள்ளன. மேலும் தொற்று நோய்கள் பரவ கூடும். எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து ஊழியர்கள் பணிபுரிகின்றனரா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்