வயலை சுற்றி அமைத்த மின்வேலியில் சிக்கி யானை சாவு

வயலை சுற்றி அமைத்த மின்வேலியில் சிக்கி யானை பரிதாபமாக இறந்தது.

Update: 2023-04-10 20:40 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டம் சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 70). விவசாயியான இவருக்கு சிவகிரி மேற்கே பெரிய ஆவுடைபேரி கண்மாய் பகுதியில் வயல் உள்ளது. இதில் நெல், கரும்பு போன்ற பயிர்களை பயிரிட்டு உள்ளார்.

மேலும் இந்த வயல் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருப்பதால் அடிக்கடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

யானை சாவு

இந்த நிலையில் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக நேற்று முன்தினம் இரவில் கருப்பையா தனது வயல் பகுதியை சுற்றி மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை கருப்பையாவின் வயல் பகுதிக்கு வந்தது. அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் யானை சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த யானை துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.

குழி தோண்டி புதைப்பு

அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சிவகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, மின்வேலியில் சிக்கி பலியான யானை 10 வயது நிரம்பிய ஆண் யானை என்பது தெரியவந்தது. தொடர்ந்து உடற்கூறு பரிசோதனைக்கு பின் அந்த யானையை அங்கேயே குழி தோண்டி புதைத்தனர்.

விவசாயி கைது

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி, மின்வேலி அமைத்ததாக கருப்பையாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்