உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்வேலி

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் வகையில் விளைநிலங்களை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-07-25 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பி, கடுவனூர், கானாங்காடு, அத்தியூர், அரியலூர், சின்னகொள்ளியூர், பெரியகொள்ளியூர், ராவத்தநல்லூர், பாக்கம், புதூர் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் கரும்பு, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடுவனூரில் உள்ள அரசுக்கு சொந்தமான காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் மற்றும் உணவை தேடி அங்கிருந்து அடிக்கடி வெளியேறும் காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்டவை விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க விவசாயிகள் சிலர் சட்டத்தை மீறி தங்களது வயல்களை சுற்றி இரவு நேரங்களில் மின்வேலி அமைக்கின்றனர். இதில் வனவிலங்குகள் சிக்கி உயிரிழந்து வருகின்றன. சில நேரங்களில் மின்வேலியில் மனிதர்களும் எதிர்பாராதவிதமாக சிக்கி இறந்து வருகின்றனர். அவ்வாறு உயிரிழப்புகள் நடைபெறும் போது மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு மின்விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

சோலார் மின்வேலி

குறிப்பாக மின்வாரிய அதிகாரிகள், மின்விபத்து ஏற்படும் சமயங்களில் மட்டும் இனி யாரேனும் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ஆனால் அவர்கள் அதன்பின்னர் விவசாய நிலங்களில் அவ்வபோது ஆய்வு செய்து யாரேனும் மின்வேலி அமைத்துள்ளார்களா என பார்ப்பதில்லை. இதனால் விவசாயிகள் சிலர் எந்தவித அச்சமும் இன்றி தங்களது விளை நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்து வருகின்றனர்.

உயிரிழப்புகளை தடுக்கவும், அதே போல் வனவிலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை காக்கவும் தமிழக அரசு சோலார் மின்வேலியை அமைக்க வலியுறுத்தி வருகிறது. சோலார் மின்வேலியில் குறைந்த மின்அழுத்தம் வரும் வகையில் அமைக்கும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவதை முற்றிலும் தடுக்க முடியும் என வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

இருப்பினும் அதனை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால் விவசாயிகள் தங்களது விளைநிலத்தை சுற்றி மின்வேலி அமைக்கின்றனர். சிலர் மிகுந்த அலட்சியத்துடன் மனிதர்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையோரங்களில் வயல்வெளியை சுற்றி மின்வேலி அமைத்துள்ளனர். இதனால் மனித உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்வேலி அச்சத்தால் சில விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட தங்களது பயிர்களை பாதுகாக்க இரவு நேரத்தில் விளைநிலத்துக்கு செல்வதில்லை.

இதனால் விளைபொருட்கள் திருடுபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதை தவிர்க்க விளைநிலங்களை சுற்றி மின்வேலி அமைப்பதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சோலார் மின் வேலி அமைப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்தால் தான் மின்விபத்துகளில் இருந்து வன விலங்குகள் மற்றும் மனித உயிர்களை காப்பாற்ற முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்