பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பரிதவிக்கும் மூதாட்டி
இறந்துபோன மகன் சேமித்து வைத்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளான ரூ.15 ஆயிரத்தை மூதாட்டி ஒருவர் மாற்ற முடியாமல் தவித்து வருகிறார். மாற்றித்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து உள்ளாா்.
கோவை
இறந்துபோன மகன் சேமித்து வைத்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளான ரூ.15 ஆயிரத்தை மூதாட்டி ஒருவர் மாற்ற முடியாமல் தவித்து வருகிறார். மாற்றித்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து உள்ளாா்.
பழைய ரூபாய் நோட்டுகளுடன் வந்த மூதாட்டி
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்தவாறு பரிதாபத்துடன் மூதாட்டி ஒருவர் மனு அளித்த வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது பெயர் மாரியம்மாள் (வயது 80). கோவை உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சுந்தர்ராஜ். ஒரே மகன் செந்தில்குமார். கணவர் மற்றும் மகன் இருவரும் இறந்து விட்டனர். லாரி டிரைவரான செந்தில்குமார் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு லாரி ஓட்டி சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இதனால் நான் தனியாக வசித்து வருகிறேன்.
மாற்றித்தர கோரிக்கை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்தேன். அப்போது மகன் செந்தில்குமார் பயன்படுத்திய பழைய பை ஒன்றை பார்த்தேன். அதற்குள் ரூபாய் நோட்டுகள் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்றேன். ஆனால் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் இந்த ரூபாய் நோட்டுகளை நான் மாற்ற முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகிறேன்.
இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனே கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர கோரிக்கை வையுங்கள் என்று கூறினார்கள். அதைகேட்டு நான் கலெக்டர் அலுவலகம் வந்தேன்.
கணவர் மற்றும் மகனை இழந்து வாடும் எனக்கு இந்த பணத்தை மாற்றிக்கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து என்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க தொிவித்தார். தொடர்ந்து அவர் கலெக்டர் சமீரனை சந்தித்து அந்த ரூபாய் நோட்டுகளை காண்பித்து அவற்றை மாற்றி தர வேண்டும் என்று கோாிக்கை மனு அளித்தார். இதுதொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.