காரில் பள்ளிக்கு செல்லும் ஆசையை நிறைவேற்றிய கல்வி அதிகாரி

கீரமங்கலம் அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி மாணவர்களின் காரில் பள்ளிக்கு செல்லும் ஆசையை வட்டாரக் கல்வி அலுவலர் நிறைவேற்றினார்.

Update: 2022-09-22 17:28 GMT

கீரமங்கலம்:

அறிவொளி நகர்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்கு பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 1990-91-ல் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக இருந்த ஷீலாராணி சுங்க நரிக்குறவர் காலனியை அறிவொளி நகர் என்று பெயர் வைத்து அவர்களுக்கு அறிவொளி தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி கொடுத்து கையெழுத்துப் போட கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து பள்ளி செல்லும் வயது குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தார்.

மாணவர்களை காரில் ஏற்றி சென்ற அதிகாரி

இந்த நிலையில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் பள்ளிக்கு செல்ல முடியாததால் அறிவொளி நகர் பகுதி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்பதை அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளி செல்லாக் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தியதோடு அவர்கள் பள்ளிகளுக்கு செல்கிறார்களா என்றும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று  மாலை அறிவொளி நகருக்கு ஆய்வுக்கு சென்ற திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரனிடம் சில மாணவ, மாணவிகள் எங்களை ஒரு நாள் ஏ.சி. காரில் ஏற்றிச் செல்வீர்களா? என்று கேட்டனர். மாணவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக இன்று காலை வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் அறிவொளி நகருக்கு காருடன் வந்தார். அவர் வருவதற்குள் பல மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். எஞ்சியிருந்த மாணவர்களை தனது காரில் ஏற்றிச் சென்று கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இறக்கிவிட்டதுடன் இன்று காரில் வராத மாணவ, மாணவிகளை மற்றொரு நாள் காரில் ஏற்றி வருவதாக கூறினார். நரிக்குறவர் மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய வட்டாரக் கல்வி அலுவலரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்