மஞ்சப்பையின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரத்தில் மஞ்சப்பையின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
விழுப்புரம்:
நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற பணிகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் க.பில்ராம்பட்டு ஸ்ரீசீத்தாராமன் மேடை நாடகக்குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாடல்கள், நாடகம் மூலம் நெகிழிப்பயன்பாட்டை தவிர்த்து, மஞ்சப்பையை பயன்படுத்துவது குறித்து அக்குழுவினர் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார். இதில் உதவி பொறியாளர்கள் இளையராஜா, பிரபாகரன், ராம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.