முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்

மார்த்தாண்டம் அருகே சொத்தை எழுதி கொடுக்காததால் முதல் மனைவியை ஏமாற்றி இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் மற்றும் உடந்தையாக இருந்த போதகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-07-02 21:20 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே சொத்தை எழுதி கொடுக்காததால் முதல் மனைவியை ஏமாற்றி இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் மற்றும் உடந்தையாக இருந்த போதகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆட்டோ டிரைவர்

மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜின்குமார் (வயது 36), ஆட்டோ டிரைவர். இவருக்கும், பாகோடு பகுதியை சேர்ந்த சந்தியா (34) என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சந்தியா வேலை பார்த்து வருகிறார்.

இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு சந்தியா பிரிந்தார். பின்னர் குழந்தைகளுடன் பாகோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கினார். ஆனால் அவர் முறைப்படி கணவரிடம் இருந்து விவாகரத்து எதுவும் வாங்கவில்லை.

2-வது திருமணம்

இந்தநிலையில் விஜின்குமார் தனது மனைவி சந்தியாவுக்கு தெரியாமல் சமீபத்தில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் 18 வயதுடைய ஒரு இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்தார். இதை அறிந்த சந்தியா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கணவர் விஜின்குமாரை சந்தித்து முறையிட்டார்.

அப்போது விஜின்குமார் சந்தியாவிடம், உனக்கு சொந்தமான சொத்தை எழுதி தருமாறு உன் பெற்றோரிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் தரவில்லை. பிறகு ரூ.10 லட்சமும் கேட்டேன், அதனையும் கொடுக்கவில்லை. இதேபோல் நீயும் சொத்தை எழுதிக் கொடுக்காததால் 2-வது திருமணம் செய்து கொண்டேன் என்றார்.

உடனே போலீசில் புகார் கொடுப்பதாக சந்தியா கூறியதும் அவரை தகாத வார்த்தைகளால் விஜின்குமார் திட்டியதோடு திடீரென வெட்டுகத்தியால் வெட்ட முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் சந்தியா கணவரிடமிருந்து தப்பி சென்று விட்டார்.

4 பேர் மீது வழக்கு

பின்னர் அவர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயராணி விசாரணை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவரான கணவர் விஜின்குமார் மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த ஈத்தவிளையை சேர்ந்த சபை போதகர் பிரின்ஸ், உடந்தையாக இருந்த களியலை சேர்ந்த சிவகுமார், சுரேஷ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்