திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 750 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான 8 பணி இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல 12-ஆம் வகுப்பிற்கான கணிதம், வரலாறு, பொருளியல் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர் பணி இடங்களும் காலியாக உள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வலியுறுத்தி புது கும்மிடிப்பூண்டி பஜாரில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய விவசாய சங்க நிர்வாகிகள், அகில இந்திய மாதர்சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.