அய்யனார் கோவிலில் சாமிகளுக்கு படையல் போடும் இடத்தை மறைத்து சுற்றுச்சுவர் அமைக்க முயற்சி

கண்டியாநத்தம் அய்யனார் கோவிலில் சாமிகளுக்கு படையல் போடும் இடத்தை மறைத்து சுற்றுச்சுவர் அமைக்க முயற்சி செய்வதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-06-19 18:30 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 284 மனுக்களை பெற்றார். பின்னர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.

கூட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், புதுக்கோட்டை தெட்சிணாமூர்த்தி மார்க்கெட் பகுதியில் 3 ரேஷன் கடைகள் உள்ளன. மேலும் கோவில், மசூதி, பழக்கடைகள், மளிகை கடைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கிறார்கள்.

இந்தநிலையில் சிலர் இந்த பாதையை மறித்து அடைத்துள்ளனர். எனவே அந்த பாதையை திறந்து எப்போதும் போல் மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

குலதெய்வ பூஜை

குறவனிக்காட்டு அய்யனார் மற்றும் பிடாரி கருப்பர் கோவில் பங்குதாரர்கள், ஆலவயல் ஊர் மற்றும் குளக்காரன்கரை வகையறா சார்பாக கோவில் பூசாரி சித்தாண்டி அளித்த மனுவில், பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் கிராமத்தில் உள்ள குறவனிக்காட்டு அய்யனார் என்ற கரவேல் காட்டு அய்யனார் மற்றும் பிடாரி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் கட்டுப்பட்டது. இந்த கோவிலில் அனைத்து ஊர் பொதுமக்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது கோவிலை சுற்றி கண்டியாநத்தம் கிராமத்தை சேர்ந்த சிலர் கோவிலில் உள்ள சாமிகளுக்கு படையல் போடும் இடத்தை மறைத்து சுற்றுச்சுவர் எடுப்பதற்கு ஆயத்த வேலைகள் செய்துள்ளனர். இதுகுறித்து தாசில்தார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் பொன்னமராவதி போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது குலதெய்வ பூஜை செய்ய வேண்டி இருப்பதால் தினமும் பூஜை செய்ய உத்தரவு வழங்கி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வைத்திறன் குறைபாடுடைய மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13 ஆயிரத்து 500 வீதம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளை கலெக்டர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்