விவசாயி வீட்டில் திருட முயற்சி

பழனியில், விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-12-24 16:57 GMT

பழனி திருநகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 64). விவசாயி. அவருடைய மனைவி கனகா. ஓய்வுபெற்ற நர்சு. நேற்று முன்தினம் சந்திரசேகர் தனது மனைவியுடன் கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று காலை சந்திரசேகர் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சம்பவம் குறித்து சந்திரசேகருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பழனி இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர்.

விசாரணையில், ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவு நேரத்தில் சந்திரசேகர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம், நகை இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது தெரியவந்தது. இந்நிலையில் வீட்டின் வளாகத்தில் இருந்த மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் இணைப்பு குழாய் திறந்து இருந்தது. எனவே சந்திரசேகர் வீட்டில் திருட வந்தவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை மட்டும் திருடி சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் திருட்டு முயற்சி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்