நீர்நிலை வாய்க்காலை ஆக்கிரமிக்க முயற்சி

நீர்நிலை வாய்க்காலை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தனா்.

Update: 2023-08-28 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் மணிமுத்தாறு தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் மணிமுத்தாறு தெருவிற்கும், சேர்மன் சொக்கலிங்கம் 3-வது தெருவிற்கும் இடைப்பட்ட பகுதியில் நீர்நிலை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் வழியாக ரெயில்வே காலனி, சண்முகபுரம் காலனியின் ஏனைய தெருக்கள், காவலர் குடியிருப்பு, தொலைதொடர்பு ஊழியர் குடியிருப்பு ஆகிய பகுதிகளின் கழிவுநீர் செல்கின்றன. அதுமட்டுமின்றி தெற்கு ரெயில்வே காலனியில் பொழியும் மழைநீர், இந்த கால்வாய் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. இந்த வாய்க்காலை போலீஸ் அதிகாரி ஒருவரும் மற்றும் தனிநபர் ஒருவரும் சேர்ந்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் தவறான முறையில் பெறப்பட்ட பட்டா மற்றும் செல்லத்தகாத கிரய ஆவணத்தை பயன்படுத்தி நீர்செல்லும் வழியை தடை செய்து நில ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்ட முயற்சி செய்து வருகின்றனர். இந்த நீர்வழிப்பாதையை தடை செய்தால் எதிர்காலத்தில் மழையின்போது வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது. எனவே நீர்நிலை வழிப்பாதையை தடை செய்து நில மோசடி செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்