திருத்தணி அருகே மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது

திருத்தணி அருகே மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-10-08 08:27 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 41). இவர் கனகம்மாசத்திரம் பஜார் வீதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். பாபு புதிதாக கட்டியுள்ள கடைக்கு மின் இணைப்பு பெறுவதற்காக கனகம்மாசத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

இதனால் தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள கனகம்மாசத்திரம் மின்வாரிய அலுவலகத்திற்கு பாபு சென்றார். அப்போது அங்கு இருந்த உதவி மின் பொறியாளர் புஷ்பராஜ் புதிய மின் இணைப்பு கொடுக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

மின் இணைப்புக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத பாபு இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பாபுவிடம் கொடுத்து உதவி பொறியாளரிடம் கொடுக்கும்படி கூறினர். அதன்படி கனகம்மாசத்திரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு நேற்று காலை பாபு சென்று உதவி பொறியாளர் புஷ்பராஜியிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வி, மாலா ஆகியோர் புஷ்பராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மின் வாரிய ஊழியரிடம் அலுவலகத்தில் வைத்தே லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்