பக்ரைன் நாட்டில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அரியலூர் பெண் சென்னை அழைத்து வரப்பட்டார்

பக்ரைன் நாட்டில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அரியலூரைச் சேர்ந்த பெண் விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டார்.

Update: 2022-10-09 09:40 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா மணப்பத்தூரை சேர்ந்தவா் செல்வநாயகி. இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலை செய்வதற்காக பக்ரைன் நாட்டுக்கு சென்றார். தன்னுடைய குடும்பத்தின் வறுமை காரணமாக தொடர்ந்து அங்கேயே பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் செல்வநாயகிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உயர் ரத்த அழுத்தத்தினால் மூளைக்கு செல்லும் நரம்புகள் அடைப்பட்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாா். இதனால் பக்ரைனில், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. செல்வநாயகி உடல் நிலை ஓரளவு முன்னேற்றம் அடைந்தது. அவரை சொந்த நாடான இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் செல்வநாயகியால் எழுந்து நிற்கவோ, உட்காரவோ முடியாததால் அவரை விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழ் பொதுநல அமைப்புகள் செல்வநாயகியை தமிழ்நாட்டுக்கு அனுப்ப தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதன்படி விமானத்தில் படுக்கை வசதியுடன் அனுப்ப அதிகமான தொகை தேவைப்பட்டது. இதையடுத்து மத்திய மற்றும் தமிழக அரசின் உதவியை நாடினர். இந்திய தூதரக அதிகாரிகளும், தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறையும் அதற்காக முயற்சி செய்தனர்.

இதையடுத்து வளைகுடாவில் உள்ள தமிழர்கள் உதவியுடன் பக்ரைனில் இருந்து விமானத்தில் 'ஸ்ட்ரெச்சா்' பயணியாக செல்வநாயகி, சென்னை அழைத்து வரப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் செல்வநாயகியை தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை அதிகாரிகள், தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். பின்னர் தமிழக அரசு சார்பில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்வநாயகியை அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்