கூடுதலாக 25 கி.மீ. தூரத்துக்கு அகழி வெட்டும் பணி

கோவையில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க மேலும் 25 கி.மீ. தூரத்துக்கு அகழி வெட்டப்பட்டு வருவதாக மாவட்ட வன அதிகாரி தெரிவித்தார்

Update: 2023-09-20 19:00 GMT

கோவை

கோவையில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க மேலும் 25 கி.மீ. தூரத்துக்கு அகழி வெட்டப்பட்டு வருவதாக மாவட்ட வன அதிகாரி தெரிவித்தார்.

காட்டு யானைகள் அட்டகாசம்

கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, காட்டுயானை, கரடி, கழுதைப்புலி, செந்நாய் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

மேலும் கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளுக்கு கோவை கோட்ட வனப்பகுதி வலசைபாதையாக (வழிப்பாதை) இருக்கிறது. இதனால் இடம் பெயர்ந்து செல்லும் யானைகள் மற்றும் கோவையில் உள்ள யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

350 கி.மீ. தூரம் அகழி

இதைத்தடுக்க கோவை கோட்ட வனப்பகுதியில் மொத்தம் 350 கி.மீ. தூரத்துக்கு அகழி வெட்டப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் சில இடங்களில் அகழி வெட்டப்படாததாலும், அகழியில் மண் சரிந்து விழுந்ததாலும் அதன் வழியாக காட்டு யானைகள் எளிதாக வனப்பகுதியை விட்டு வெளியேறி விடுகிறது.இதை கண்டறிந்து அந்த காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் இந்த பணிக்காக வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கூடுதலாக 25 கி.மீ. தூரம்

இந்த நிலையில் எந்தெந்த பகுதியில் அகழியில் மண் மூடி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அது குறித்த அறிக்கையும் அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அதை பராமரிக்க உத்தரவிட்டு உள்ளதுடன் அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. அகழி வெட்டப்பட்டு வருவதையும், ஆழப்படுத்தப்பட்டு வரும் பணியையும் மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இது குறித்து மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் கூறியதாவது:-

கோவை கோட்ட வனப்பகுதியில் ஆழம் குறைந்த அகழிகள், எந்த பகுதிகளில் எல்லாம் கூடுதலாக அகழி வெட்ட வேண்டும் என ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி கூடுதலாக 25 கி.மீ. தூரத்துக்கு அகழி வெட்டும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

150 கி.மீ. தூரத்துக்கு பராமரிப்பு

இதுதவிர 150 கி.மீ. தூரத்துக்கு மண் மூடிய அகழியை ஆழப்படுத்தி பராமரிப்பு பணியும் நடந்து வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடையும். மலையடிவாரத்தில் அகழி வெட்டப்படுவதால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவது தடுக்கப்படும்.

மலையடிவார பகுதியை சேர்ந்தவர்கள் கால் நடைகளை மேய்ப்பதற்காக வனப்பகுதிக்குள் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது சிலர் அகழியை சேதப்படுத்துவதாக புகார் வந்து உள்ளது. எனவே யாராவது அகழியை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்