திருப்பூர் மாநகரின் முக்கிய சந்திப்பு சிக்னல்களில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்சு வாகனங்கள் அடிக்கடி சிக்கிதிணறுகின்றன.

திருப்பூர் மாநகரின் முக்கிய சந்திப்பு சிக்னல்களில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்சு வாகனங்கள் அடிக்கடி சிக்கி திணறுகின்றன.

Update: 2023-02-12 13:13 GMT

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகரின் முக்கிய சந்திப்பு சிக்னல்களில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்சு வாகனங்கள் அடிக்கடி சிக்கி

திணறுகின்றன. பணியில் உள்ள போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில் நகரமான திருப்பூரில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குமரன்சாலை, ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதை தவிர்க்கும் வகையில் அவினாசி சாலை, பி.என்.ரோடு, பல்லடம் சாலை, காங்கேயம் சாலை உள்ளிட்ட சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை சரிசெய்ய போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதையும் தாண்டி திருப்பூர் எந்த நேரமும் பரபரப்பாகவே இயங்குவதால் சாலை விபத்துக்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் சராசரியாக 5 நிமிடங்களுக்கு ஒரு ஆம்புலன்சுகள் பயணிக்கிறது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தாராபுரம் சாலையில் அமைந்துள்ள நிலையில் திருப்பூரில் பி.என்.ரோடு, அவினாசி சாலை, காலேஜ் ரோடு, ஊத்துக்குளி சாலை, மங்கலம் சாலை, காங்கேயம் சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவசர சிகிச்சைகளுக்கு மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளை கடந்து செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது. சில நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல்களில் ஆம்புலன்சுகள் சிக்கிக் கொள்கின்றன. குறிப்பாக பழைய பேருந்து நிலையம், குமரன் சாலை, ரயில்வே மேம்பாலம், பி.என். ரோட்டில் பூலுவபட்டி சிக்னல், அவினாசி ரோட்டில் குமார்நகர் சிக்னல் ஆகிய இடங்களில் ஆம்புலன்சுகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. பெரும்பாலான நேரங்களில் தானியங்கி சிக்னல்கள் உள்ள இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் அந்த வாகனங்களை உடனடியாக தாண்டி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. முன்னதாகவே ஆம்புலன்சுகள் சைரன் ஒலி எழுப்பியபடி வந்தாலும் சிக்னல்களில் சிக்கி திணறும் நிலைமையே தொடர்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, திருப்பூரில் தானியங்கி சிக்னல்கள் உள்ள இடங்களில் பணியாற்றும் பெரும்பான்மையான போலீசார் ஆம்புலன்சுகளின் சைரன் ஒலியை கவனிப்பதில்லை. போலீசார் சிலர் செல்போன்களை பயன்படுத்தியபடியே இருப்பதால் ஆம்புலன்சு சைரன் ஒலியை கேட்டு அந்த வாகனம் வரும் சாலையில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதில்லை. ஏற்கனவே திருப்பூரில் பணியாற்றி அனுபவமுள்ள போலீசார் பணியை சரியாக மேற்கொண்டு வரும் நிலையில், புதிதாக பணிக்கு வந்துள்ள போலீசாருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களிலும், ஆம்புலன்சுகள் வரும் சமயத்திலும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். இதன் காரணமாக ஆம்புலன்சுகள் சிக்னல்களில் 2 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை காத்திருந்து, கஷ்டப்பட்டு கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதேபோன்று 7,8 சிக்னல்களை கடந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்வதற்குள் உயிரிழப்பு போன்ற ஆபத்தும், அபாயமும் ஏற்படுகிறது. எனவே மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளிலும், தானியங்கி சிக்னல்கள் உள்ள இடங்களிலும் பணியாற்றும் போலீசார் எந்த நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் ஆம்புலன்சு வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறு இல்லாமல் எளிதாக மற்ற வாகனங்களை கடப்பதற்கு வசதியாக போலீசார் வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற துரித நடவடிக்கையின் மூலம் உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்சுகளில் செல்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொறுப்பை சரியான முறையில் போலீசார் நிறைவேற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்