நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி? டி.டி.வி.தினகரன் பதில்

‘‘நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் நிச்சயம் கூட்டணி அமைப்போம்’’ என அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.;

Update: 2022-08-15 21:37 GMT

சென்னை,

அ.ம.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர்கள் ஜி.செந்தமிழன், ரங்சாமி, சண்முகவேல் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எல்.ராஜேந்திரன், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்

அடுத்த ஆண்டு அ.ம.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் திருச்சியில் ஒரு மாபெரும் மாநாடு போல நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தேர்தல் வெற்றி, தோல்வி என்னை எப்போதுமே பாதித்தது கிடையாது.

எம்.ஜி.ஆர். உருவாக்கி ஜெயலலிதா வளர்த்த கட்சியை மீட்க வேண்டும் என்ற நோக்குடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் என்னுடன் பயணிக்கிறார்கள். வருங்காலத்தில் ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம்.

யாரும் தடுக்க முடியாது

ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் (அ.தி.மு.க.) தற்போது அல்லல்படும் நிலைமையை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. துரோகிகள், சுயநலவாதிகளின் பிடியில் அக்கட்சி இருக்கிறது. வருங்காலத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கும் சக்தியாக உருவாகி கொண்டிருப்பது அ.ம.மு.க.தான். நாம் ஜனநாயக ரீதியில் தேர்தலில் வெற்றிபெறும்போது தானாக அந்த இயக்கம் நம்மிடம் வந்து சேரும். நமக்கு உரிமை இருக்கிறது. அது ஜெயலலிதாவின் சொத்து. அ.ம.மு.க.தான் வருங்காலத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்க போகிறது.

நாடாளுமன்ற-சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற அ.தி.மு.க. தட்டுத்தடுமாறுகிறது. அ.ம.மு.க. வெற்றிபெற முடியவில்லை. ஆனால் துரோகிகள் வெற்றிபெற முடியாமல் செய்தது அ.ம.மு.க.தானே. நமக்கு வெற்றி தாமதப்படலாம். ஆனால் அதை யாரும் தடுத்திட முடியாது.

தேசிய கட்சிகளுடன் நிச்சயம் கூட்டணி

தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு பற்றி சந்தி சிரிக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் திராவிட மாடல்... திராவிட மாடல்... என்கிறார்கள். நாங்களெல்லாம் பாகிஸ்தானில் இருந்தா வந்திருக்கிறோம். இதையெல்லாம் கேட்கவே அசிங்கமாக இருக்கிறது.

பா.ஜ.க., காங்கிரஸ் எனும் 2 தேசிய கட்சிகள்தான் இருக்கிறது. பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்கிற சக்தி இவர்களிடம்தான் இருக்கிறது. அ.ம.மு.க. ஒரு மாநில கட்சி. எனவே பிரதமரை உருவாக்கிற முயற்சியில் அணில் போன்ற செயல்பாட்டில் இருப்போம்.

எனவே 2 தேசிய கட்சியில் ஏதாவது ஒரு கட்சியுடன் நாம் கூட்டணி அமைப்போம். அது உறுதி. சமீபத்தில் கூட பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதில் தவறு இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தேன். உடனே அதையும் விமர்சிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

கூட்டத்தில், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்குவதற்கு கண்டனம், தமிழகத்தில் சொத்துவரி, மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்