அமிர்தி பூங்கா நாளை திறந்திருக்கும்

விஜயதசமி தினத்தையொட்டி அமிர்தி பூங்கா நாளை திறந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-10-23 06:45 GMT

வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமிர்தி வன உயிரியல் பூங்கா உள்ளது. இது ஜவ்வாதுமலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத்தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகு, வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் உள்ளன. மேலும் பூங்காவில் அடர்ந்து வளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம்.

ஞாயிறு உள்பட மற்ற அனைத்து நாட்களும் பூங்கா திறந்திருக்கும். வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பொழுதை கழித்து விட்டு செல்கின்றனர்.

உயிரியல் பூங்கா பராமரிப்பு பணிக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை விடப்படுவது வழக்கம். அன்றைய தினம் விலங்குகள் பராமரிக்கப்படுகிறது.

இதில் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை நாட்கள் செவ்வாய்க்கிழமையில் வந்தால் அன்று பொதுமக்களின் பார்வைக்காக பூங்கா திறந்து வைக்கப்பட்டுகிறது.

அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) விஜயதசமி தினத்தன்று பூங்கா வழக்கம் போல் செயல்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்