சுதந்திர தின அமிர்த பெருவிழா நிறைவு
நாமக்கல்லில் சுதந்திர தின அமிர்த பெருவிழா நிறைவு பெற்றது.
இந்திய அரசின் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் நாமக்கல்லில் கடந்த 5 நாட்களாக இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு அமிர்த பெருவிழா நடைபெற்று வந்தது. இதன் நிறைவுநாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமை தாங்கினார். இதையொட்டி பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டி, பேச்சுப்போட்டி, கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சார்பு நீதிபதி விஜய்கார்த்திக் பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் இந்த சட்டம் எனக்கு தெரியாது என்று சொல்லி குற்றம் செய்தவர் தப்பித்துக்கொள்ள முடியாது. எனவே அனைவருமே அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் பிரச்சினை குறித்து தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் பெண்கள் கபடி பயிற்சியாளர் புவனேஸ்வரி, புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் டாக்டர் சிவகுமார், தர்மபுரி கள விளம்பர உதவியாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.