ஓடும் ஆம்புலன்சில் தொழிலாளி மனைவிக்கு குழந்தை பிறந்தது

Update: 2023-07-22 15:29 GMT



கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா, அரியங்குருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (வயது 33). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா (20).

இவர்கள் தற்போது ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கொல்லங்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட, கந்தசாமிபாளையம் எலவநத்தம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் குடும்பமாக உறவினர்களுடன் தங்கி இருந்து கொண்டு கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில் அம்பிகா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அம்பிகாவுக்கு நேற்று மாலை 4.10 மணி அளவில் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. அம்பிகாவின் குடும்பத்தினர் அருகில் உள்ள சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு செல்ல செல்போனில் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். இதனை தொடர்ந்து முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 108ஆம்புலன்ஸ் வாகனம் எலவநத்தம் கிராமத்திற்கு விரைந்தது.

கர்ப்பிணி அம்பிகாவை ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் தங்கமணி, ஓட்டுநர் இளங்கோவன் மற்றும் செவிலியர் குழுவினர் ஏற்றிக்கொண்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஓடும் ஆம்புலன்சில் அம்பிகாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் அம்பிகா மற்றும் பச்சிளம் பெண் குழந்தையை சிவகிரி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்து அனுமதித்தனர். சிவகிரி அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் கண்காணிப்பில் தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

மேலும் செய்திகள்