சயன கோலத்தில் அருள்பாலித்த அம்மன்

ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சயன கோலத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-22 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சயன கோலத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் திருவிழா

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் நடப்பாண்டில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 19-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 20-ந் தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை பல்வேறு உபயம் சார்பில், தேர்வீதி உலா நடந்தது.

ஆதிபராசக்தி, துர்க்கை, காமாட்சியம்மன், கருமாரியம்மன், மாளிகைபுரத்து அம்மன், பவானி அம்மன், ராஜகாளி, பட்டத்தரசி அம்மன், ஹெத்தை அம்மன் உள்ளிட்ட அலங்காரங்களில் முக்கிய வீதிகளில் உலா வந்தார். கடந்த 17-ந் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேர் கலசம் பொருத்தப்பட்டது.

விடையாற்றி உற்சவம்

18-ந் தேதி காலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்கார சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு விநாயகர், மாரியம்மன் உள்பட எழுந்தருளிய தெய்வங்களுக்கு அலங்கார பூஜை நடந்தது. அதன் பின்னர் மதியம் 1.55 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து வெள்ளைக் குதிரையில் நீலாம்பிகை பவனி வரும் நிகழ்ச்சி, அம்மன் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி அம்மன் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்