அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா

Update: 2023-07-22 14:18 GMT


உடுமலை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பூரம்

உலக மக்களை காப்பாற்றுவதற்காக ஆடி மாதம் பூரம் நட்சத்திர தினத்தன்று பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த தினமே ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சைவ, வைணவ ஆலயங்களில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெறுகிறது.

அம்மன் நித்தியகன்னி என்பதால் பிள்ளைபேரு, வளைகாப்பு கிடையாது என்பதால் ஆடிப்பூர தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது. அதன் பின்பு அம்மனுக்கு அணிவித்த வளையல் பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதை பெண்கள் அணிந்து கொண்டால் திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ஆடிமாதத்தில் செவ்வாய், வெள்ளி ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்தப்படியாக ஆடிப்பூர நாளும் சிறப்பு பெறுகிறது.அந்த வகையில் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி உடுமலை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருக்கல்யாணம்

உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட குறிஞ்சேரி கிராமத்தில் ரங்க மன்னார் சமேத ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் திருக்கல்யாணம் நடைபெற்றது.விழாவின் முதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. மாலை 6 மணிக்கு ஊர்விநாயகர் கோவிலில் இருந்து ஆண்டாள் நாச்சியார் கோவிலுக்கு மங்கள வாத்தியம் முழங்க திருக்கல்யாண சீர்வரிசை எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மாப்பிள்ளை அழைப்பும், அதைத்தொடர்ந்து மண்டபத்தில் நிச்சயதார்த்த வைபவமும் நடைபெற்றது.

நேற்று காலை 7 மணிக்கு ரங்க மன்னார் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருமணக் கோலத்தில் எழுந்தருளி ரங்கமன்னார் ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்