அம்மா உணவகங்கள் திட்டமிடல் இன்றி தொடங்கப்பட்டன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

அம்மா உணவகங்கள் திட்டமிடல் இன்றி தொடங்கப்பட்டன என்றும், உதவி ஆணையர்களின் வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-08-25 21:41 GMT

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அம்மா உணவகங்கள் திட்ட மிடல் இன்றி தொடங்கப்பட்டது. அதற்கான துறை இல்லை. அதற்கான எந்தப்பணி நியமனங்களும் இல்லை. அதற்கான எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. ஆனால், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கும்போது, சரியான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பயனாளிகள் கணக்கிடப்பட்டு ரூ.404 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி உதவி ஆணையர்கள், செயற்பொறியாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் அவர்கள் சென்னையை சுற்றி வரும்போது, இங்கு சாலை சரியில்லை; உடனடியாக சரி செய்யுங்கள். இங்கு விளக்கு எரியவில்லை; உடனடியாக சரி செய்யுங்கள். இங்கு பாதாள சாக்கடை அடைத்து இருக்கிறது; அதை சரி செய்யுங்கள் என்பதை சொல்வதற்குதான் வாகனத்தில் இருந்த ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவார்கள்.

சாம்பார் கொண்டு வாருங்கள்

ஆனால் இந்த அம்மா உணவகங்கள் தொடங்கியபோது அந்த வாகன ஒலிப்பெருக்கிகள் எதற்கு பயன்பட்டது என்றால் கொருக்குப்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் சாம்பார் இல்லை; வண்ணாரப்பேட்டையில் இருக்கிற அம்மா உணவகத்தில் இருந்து சாம்பார் கொண்டு வாருங்கள். தண்டையார்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் இட்லி தீர்ந்து விட்டது; சவுகார்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து மீதமுள்ள இட்லிகளை இங்கு கொண்டு வாருங்கள் என்று சொல்வதற்குதான் பயன்படுத்தினார்கள்.

ஆனால் இந்த காலை உணவு திட்டம் 2022-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2022 செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன் அடைந்தனர். 2-ம் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்தபடி, இன்று (நேற்று) தமிழ்நாடு முழுவதும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன் அடையும் குழந்தைகளின் எண்ணிக்கை, எத்தனை சமையல் மையங்கள், எவ்வளவு வாகனங்கள், எவ்வளவு ஹாட் பாக்ஸ் பயன்படுத்தப்படும் என்பது அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான எந்த திட்டங்களும் அம்மா உணவகம் தொடங்கியபோது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்