அதிகாரிகளை அமித்ஷா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்
அதிகாரிகளை அமித்ஷா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றம்சாட்டினார்.;
ராஜபாளையம் அருகே கோபாலபுரம், ஜமீன்நத்தம்பட்டி, மேலராஜகுலராமன், கொருக்கான்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. கேட்டறிந்தார். பின்னர் அவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி, வட்டார தலைவர் கோபால கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.ஆய்விற்கு பிறகு மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் பெண் அமைச்சர் ராஜினாமா செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.ஆர். காங்கிரஸ் அரசு எந்த நிலையில் இருக்கிறது என்பது கவலைக்கு உரியது.காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முழுமையாக தமிழக அரசோடு துணை நிற்கும். தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கோரிக்கைகளுக்காக நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு வழங்குகிறது.
பா.ஜ.க. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறையை தங்களின் துணை அமைப்புகள் போல் செயல்படுத்துகின்றன. இந்த அமைப்புகளை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து அரசியல் எதிரிகளை விரட்ட விரும்புகிறது.
பிற கட்சியை சார்ந்தவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இருக்க வேண்டும். அதிகாரிகளை அமித்ஷா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.