மக்காச்சோள பயிர்களில் மீண்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் மீண்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்கி வருகிறது. இதற்கு நிவாரணம் கிடைக்குமா? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-09-22 18:45 GMT

மக்காச்சோளம் சாகுபடியில் சிறப்பிடம்

தமிழக அளவில் மக்காச்சோளம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் சிறப்பிடம் பெற்றுள்ளதோடு, தமிழகத்தின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் சுமார் 5 லட்சம் மெட்ரிக் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மாவட்டத்தில் விவசாயிகள் நிறைய பேர் மானாவாரியாக மக்காச்சோள பயிரை சாகுபடி செய்துள்ளனர். தற்போது மக்காச்சோளம் சாகுபடி செய்து 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.

மீண்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்

ஆனால் வளர்ந்துள்ள மக்காச்சோள பயிர்களில் இளஞ்செடிகளிலேயே அமெரிக்கன் படைப்புழுக்கள் குடியேறி தண்டுகளையும், தோகைகளையும், குருத்துகளையும் குறி வைத்து தாக்கிவருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சக்திவேல் கூறுகையில், கடந்த 2018, 2019 ஆண்டுகளை போல் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் மீண்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்கி வருவது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. அப்போது மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்கியதற்கு விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களின் விளைவாக தமிழக அரசு நிவாரண தொகை வழங்கியது.

4 ஆண்டுகளாக நஷ்டம்

கடந்த 2020-ம் ஆண்டில் மழை, புயலினால் மக்காச்சோளம் பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் 2019, 2020 ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கில் உற்பத்தி செய்யப்பட்ட மக்காச்சோளத்திற்கு சரியான விலை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராகி இருந்த மக்காச்சோள கதிர்கள் தண்ணீரில் மூழ்கி, மீண்டும் முளைக்க தொடங்கின. கடந்த 4 ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மேலும் ஆண்டுதோறும் மக்காச்சோளம் நடவு பணிக்கு, களை எடுக்கும் பணிக்கும் ஆட்களின் கூலி உயர்ந்து கொண்டே போகிறது.

நிவாரணம் வழங்க வேண்டும்

கூலி உயர்ந்தாலும் வேலைக்கு ஆட்களும் கிடைப்பதில்லை. அப்படி இருந்தும் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளோம். ஆனால் தற்போது மீண்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்கி வருகிறது. சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் அமெரிக்கன் படைப்புழு தாக்கிய மக்காச்சோள பயிரை பார்வையிட்டு, அதற்கான மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு விவசாயிகளுக்கு நிவாரண தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பரிந்துரைக்கப்பட்ட ரசாயன மருந்துகள்

இதுகுறித்து வேளாண்மை அலுவலர்கள் கூறுகையில், மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் அதிகமாக காணப்பட்டால், வேம்பு சார்ந்த தாவர பூச்சிக்கொல்லியான அசாடிராக் டின் அல்லது 5 சத வேப்பங்கொட்டை கரைசல் தெளித்தல், இளம் புழு பருவத்தில் மெட்டாரைசியம் அனிசோபிலே அல்லது பவேரியா பாசியானா என்ற உயிரி பூச்சிக்கொல்லியும், வளர்ச்சி அடைந்த புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றையும் பயன்படுத்தலாம். பரிந்துரைக்காத ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்தக்கூடாது, என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்