ஆம்பூர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரிடம் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை

ஆம்பூர் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவருக்கு வெளிநாட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, அவரை மத்திய உளவுத்துறை போலீசார் வீடுபுகுந்து அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-30 13:40 GMT

ஆம்பூர் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவருக்கு வெளிநாட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, அவரை மத்திய உளவுத்துறை போலீசார் வீடுபுகுந்து அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேசினார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இருந்து பல்வேறு செல்போன் எண்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் ஒருவர் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த உரையாடல்களை டெல்லியில் உள்ள மத்திய உளவுத்துறை போலீசார் கண்காணித்து செல்போன்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேசிய நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. உடனடியாக இது பற்றி சென்னையில் உள்ள உளவுத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து உளவுத்துறை துணைபோலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், வேலூர், திருப்பத்தூர், திருச்சி நகரங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உளவுத்துறை போலீசார் என 16-க்கும் மேற்பட்டவர்கள் ஆம்பூருக்கு வந்தனர்.

கல்லூரி மாணவரிடம் விசாரணை

அவர்கள் நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாணவரை பிடித்து ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட மாணவர் ஆற்காடு அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 செல்போன்கள், சிம்கார்டுகளை பறிமுதல் செய்து, இவருக்கு வெளிநாட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆம்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்