ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தொடர்ந்த வழக்கு... தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 800 டிரைவர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2023-06-08 15:26 IST

சென்னை,

தமிழக சுகாதாரத் துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்புலன்ஸ் டிரைவர்களாக நியமிக்கப்பட்ட 65 பேர் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், கொரோனா பேரிடர் காலங்களில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு பணியாளர்களின் நலன்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகவும் மத்திய அரசை பொறுத்தவரையில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு பணி நிரந்தரம் கேட்டு அளித்த விண்ணப்பங்கள் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருவதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள 800 டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல் இந்த டிரைவர் காலியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்எஸ் ரமேஷ் 800 டிரைவர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்