கறம்பக்குடி அருகே அம்பேத்கர் பேனர் சேதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

கறம்பக்குடி அருகே அம்பேத்கர் பேனர் சேதப்படுத்தியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-27 18:32 GMT

கறம்பக்குடி அருகே புதுவளசல் கிராமத்தில் அம்பேத்கர் உருவத்துடன் கூடிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த பேனரை மர்ம ஆசாமிகள் கிழித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் அம்பேத்கர் பேனர் சேதப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே இப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் பேனர்கள் 5 முறை சேதப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிருப்தி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அம்பேத்கர் பேனரை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி புதுவளசலில் கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த 2 ஆண்டுகளில் 5 முறை இதேபோல் பேனர் கிழிப்பு சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும் ஆனால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பேனரை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதில், சமாதானம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலை கைவிட்டனர். பின்னர் பேனர் கிழிக்கப்பட்டது குறித்து கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த மறியலால் கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்