ஒருதலைக்காதல் தோல்வியில் முடிந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டது அம்பலம்

எரிந்த நிலையில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒருதலைக்காதல் தோல்வியில் முடிந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2023-02-16 18:30 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் புறவழிச்சாலை விராட்டிக்குப்பம் கணேஷ் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் நேற்று முன்தினம், வாலிபர் ஒருவர் உடல் எரிந்த நிலையில் கரிக்கட்டையாகி பிணமாக கிடந்தார். இதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் உடல் அருகில் கிடந்த அவரது பேக்கை கைப்பற்றி சோதனை செய்ததில் அதற்குள் ஆதார் அட்டை, செல்போன், மணிபர்ஸ் இருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர், தென்காசி மாவட்டம் கருவந்தா சோலைச்சேரி அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஆபிரகாம் மகன் பெஞ்சமின் (வயது 28) என்பதும், இவர் சென்னை அண்ணா நகரில் தங்கியிருந்து ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

விசாரணை

இதையடுத்து பெஞ்சமினின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் உடலில் எந்தவொரு காயங்களும் இல்லை. அவருடைய மூச்சுக்குழல், நுரையீரலில் புகை கரி படிந்திருந்தது. இதன் அடிப்படையில் அவர், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

ஒருதலைக்காதல்

பெஞ்சமின், சென்னை அண்ணா நகரில் நண்பர்கள் சிலருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்து உணவு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். விசேஷ நாட்கள், ஆலய திருவிழா சமயங்களில் மட்டும் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். இவர் தனது உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே பெஞ்சமினுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர். மாறாக அந்த பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து கடந்த 10-ந் தேதி சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

அன்றைய தினத்தில் இருந்து பெஞ்சமின் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லையே, அவருக்கு இன்னொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதே என்று எண்ணி வருந்தியுள்ளார். மேலும் தனது தங்கைகளுக்கு எப்படி திருமணம் செய்து வைக்கப்போகிறோமோ, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தான் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறோமோ என்று எண்ணி 2 நாட்களாக வேலைக்கு செல்லாமலும், தனது நண்பர்கள் யாரிடமும் பேசாமலும் தான் தங்கியிருந்த வீட்டிலேயே மது அருந்தியபடி சோகத்துடன் இருந்துள்ளார்.

காதலர் தினத்தில் தற்கொலை

பின்னர் 13-ந் தேதியன்று (திங்கட்கிழமை) பெஞ்சமின் வேலைக்கு சென்றுள்ளார். மறுநாள் காதலர் தினத்தன்று தனது காதலியை எண்ணி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். இதனால் அவர், தனது குடும்பத்தினரை தொடர்புகொண்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். அதன்படி அன்று காலை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். பகல் 12 மணியளவில் அவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து வந்துள்ளார்.

இந்நிலையில் காதலர் தினத்தன்று பல காதல் ஜோடிகள் மகிழ்ச்சியாக அன்பை பரிமாறிக்கொண்டு வரும் நிலையில் தன்னுடைய காதல் தோல்வியில் முடிந்துவிட்டதே என்றும், காதலியை கரம்பிடிக்க முடியவில்லையே என்று எண்ணி வருந்தியுள்ளார். ஒருகட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், காதலர் தினத்தன்றே தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார். அதன்படி விழுப்புரம் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்குள்ள முட்புதருக்குள் இறங்கினார். அங்கு மது அருந்திவிட்டு பின்னர் தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்