தொழிலாளியை அடித்து கொன்றது அம்பலம்

ெதாழிலாளி மர்மச்சாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை அடித்து கொலை செய்த வியாபாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-09 16:38 GMT

தொழிலாளி மர்மச்சாவு

நத்தம் அருகே உள்ள எல்.வலையபட்டியை சேர்ந்தவர் அழகுப்பிள்ளை. அவருடைய மகன் சீனி (வயது 35). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. கடந்த 6-ந்தேதி இவர், நத்தம் அருகே வீமாஸ் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் முன்பு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் சீனியின் சாவில் மர்மம் இருப்பதாக, அவரது உறவினர்கள் நத்தம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்மச்சாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சீனியை அடித்து கொன்றது அம்பலமானது.

அடித்து கொலை

அதாவது சம்பவத்தன்று வத்திபட்டியில் உள்ள ஆசை என்பவரின் பெட்டிக்கடையில் பொருட்கள் வாங்க சீனி சென்றிருக்கிறார். அங்கு அவருக்கும், ஆசைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு சீனி அங்கிருந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசை, தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து சீனியை தேடி சென்றார்.

அப்போது நத்தம் அருகே வீமாஸ் நகரில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு சீனி நின்று கொண்டிருந்தார். இதைக்கண்ட ஆசை மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து சீனியை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் மயங்கி விழுந்த சீனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து மர்மச்சாவு வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

2 பேர் கைது

இதனையடுத்து தனிப்படை போலீசார் ஆசை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த தென்னரசு ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சவரிப்பட்டியை சேர்ந்த பாபு, வலையப்பட்டியை சேர்ந்த நல்லியப்பன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

--------

Tags:    

மேலும் செய்திகள்