அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Update: 2022-09-25 13:05 GMT


உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து நேற்று பாசனத்திற்கான தண்ணீரை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அமராவதி ஆறு பழைய மற்றும் புதிய பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அமராவதி ஆற்றை பிரதானமாகக் கொண்டுள்ள 10 பழைய ராஜ வாய்க்கால் மற்றும் புதிய பாசன நிலங்களில் சம்பா சாகுபடிக்காக பிரதான கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

இதையடுத்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று அமராவதி அணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பொத்தானை அழுத்தி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தனர்.

அதைத்தொடர்ந்து அமராவதி ஆற்று சட்டர்கள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர். நேற்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி வரையில் 135 நாட்களில் 70 நாட்களுக்கு திறப்பு 65 நாட்களுக்கு அடைப்பு என்ற முறையில் உரிய இடைவெளி விட்டு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

47ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள்

இதனால் அமராவதி ஆறு மூலம் பாசன பெறுகின்ற பழைய வாய்க்கால்களில் 21 ஆயிரத்து 867 ஏக்கரும் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறுகின்ற புதிய பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் ஆக மொத்தம் 47ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், நகரச்செயலாளர் வேலுச்சாமி, ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் கண்ணாமணி, ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன், மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மலர்வழி பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி பழனிச்சாமி, மோகனவள்ளி ராஜசேகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர்கள் அரவிந்த், சிங்கார வடிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்றுகாலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.72 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 278 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 196 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் செய்திகள்