திருப்புவனம் பேரூராட்சி கூட்டத்தில் அமளி
திருப்புவனம் பேரூராட்சி கூட்டத்தில் அமளி ஏற்பட்டது.
திருப்புவனம்,
திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று தலைவர் சேங்கைமாறன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ரகமத்துல்லாகான் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜெயராஜ் வரவேற்றார். பின்பு தலைவர் சேங்கைமாறன், இளநிலை உதவியாளர் நாகராஜனை தீர்மானங்களை வாசிக்க சொன்னார். அப்போது 5-வது வார்டு உறுப்பினர் பாரத்ராஜா, 15-வது வார்டு உறுப்பினர் அயோத்தி ஆகியோர் தாங்கள் பேசுவதற்கு மைக் வேண்டும் என்றனர். அதற்கு தலைவர் ஒரு மைக்தான் உள்ளது என்றார். இதையடுத்து 12-வது வார்டு உறுப்பினர் செல்வராஜ் உறுப்பினர்கள் பேச மைக் தராததை கண்டித்து வெளிநடப்பு செய்தார். தீர்மானங்களை வாசிக்கும் போது பாரத்ராஜா, அயோத்தி தங்களுக்கு மைக் தராமல் தீர்மானங்களை வாசிக்க கூடாது என்றனர். அப்போது தீர்மானம் வாசித்து முடிந்தவுடன் உறுப்பினர்கள் குறைகளை தெரிவிக்கலாம் என தலைவர் கூறினார்.
ஆனால் உறுப்பினர் பாரத்ராஜா, நாகராஜன் கையில் இருந்து தீர்மானங்களை பறித்து, தரையில் அமர்ந்து தங்களுக்கு பேச மைக் வேண்டும் என இருவரும் கோஷமிட்டதாக தெரிகிறது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வந்து பாரத்ராஜாவை அழைத்து சென்றார்.
பின்பு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், கூட்டம் நடத்த விடாமல் செய்ததாக அயோத்தி, பாரத்ராஜா ஆகியோர் மீது திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதேபோல 4-வது வார்டு உறுப்பினர் வெங்கடேஸ்வரி, தலைவர் சேங்கைமாறன் மீதும், 8-வது வார்டு உறுப்பினர் வசந்தி, அயோத்தி, பாரத்ராஜா ஆகியோர் மீதும் தனித்தனியாக போலீசில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.