முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்குடி,
காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரி 1947-ல் வள்ளல் அழகப்ப செட்டியாரால் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இக்கல்லூரியில் 1947-ல் இருந்து 2021 வரையிலான முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைவராகவும், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்திரமோகன் செயலாளராகவும், தொழிலதிபர் காரைக்குடி ராமநாதன் பொருளாளராகவும் செயல்பட்டு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சியில் 350 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 1953-ம் ஆண்டில் படித்து முடித்த தஞ்சாவூரை சேர்ந்த 88 வயதான ஜானகிராமன், தேவகோட்டையை சேர்ந்த 84 வயதான இளையபெருமாள் ஆகியோர் வயதில் மூத்தவர்கள் ஆவர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தென்னவன் கலந்து கொண்டு கல்லூரி நினைவுகளை பேசினார். நிகழ்ச்சியில், மாங்குடி எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, முன்னாள் துணை வேந்தர்கள் சுப்பையா, ராமசாமி, கால்பந்தாட்டத்தில் சாதனையாளராக திகழ்ந்த கோட்டையூர் ஆனந்தன், தடகளத்தில் மாநில, தேசிய சாதனைகள் படைத்த துரைசிங்கம், முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராம், தற்போதைய துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன், பேராவூரணி முன்னாள் எம்.எல்.ஏ. திருஞானசம்பந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் நிதிஉதவி அளித்தனர். அதன்படி சுமார் ரூ.20 லட்சம் வரை வழங்கினர்.